கோப்பையை பருகும் தேநீர்

    வான்கூவர் நகரம் ஒன்றில் ரயில் நிலையம் ஒன்றுண்டு.
மரக்கட்டைகளினால் ஆன அதன் நடைமேடையில்

முன்பொருமுறை நானும் அம்மாவும்
ரயிலுக்காக காத்திருந்தோம். அங்கு வைத்துதான்
அம்மாவின் தம்பி இறந்து போனதை யாரோ வந்து
அம்மாவிடம் கூறினார்கள் கன்னங்களைத் தாண்டி கால்
விரல்களில் கண்ணீர் துளிகள் விழுந்த பிறகும்
அம்மா அந்த நடைமேடையிலேயே நின்று கொண்டிருந்தார்.
உலகம் என்பது அணுக்களால் ஆனது  நாம்
ஒரு மேசையைத் தொடுகிற பொழுது அந்த மேசையும்
நம்மைத் தொடுவது  உண்மையானால் அந்த நடைமேடையில்
அம்மாவின் அணுக்களும் கலந்திருக்கும்.

நான் போய் அந்த நடைமேடையில் அம்மா நின்ற  இடத்தில்
நிற்க போகிறேன். நீண்ட நேரம், மிக நீண்ட நேரம்
கன்னங்களைத் தாண்டி கால்விரல்களில்

கண்ணீர் துளிகள் விழுந்த பிறகும் .
                          -நான்சி வில்லியர்ட் 




உறவுகளின்றி திரியும் உயிர்கள் எப்படி இருக்கும் கடிதங்களின்றி வெறுமென கிடக்கும் தபால் பெட்டியைப்போல,மரமென்னும்  உயிரைத் தாங்க உறவுகள் எனும்  வேர்கள் கிடக்கின்றன.

ஒருநாள் சென்ட்ரல் சுரங்கப்பாதையில் ஒரு அம்மா அதன் படிக்கட்டுகளில் ஏற முடியாமல் நின்று கொண்டிருந்தார். நான் அவர்களுடைய கையை பிடித்து அழைத்துத் சென்று ஜி.எச்.வாசலில் விட்டுவிட்டு ஏம்மா? நீங்க மட்டும் தனியா வந்து இருக்கீங்க? வீட்லருந்து யாரையாவது கூட்டிட்டு வந்திருக்கலாம்ல? எனக்கு யாரும் இல்லை தம்பி! என அழ ஆரம்பித்து விட்டார். எனக்கு என்னமோ போலாகிவிட்டது.


எளிய மனிதர்களோட உறவுகள் இப்படி வலியோடுதான் சாலையில் நடமாடுகின்றன.


அவர் இல்லாத உலகத்துல என்னால இருக்க முடியாதுடா! என அழுத ஜோதி அக்கா, சின்ன வயசுல சண்ட போடும்போது ஒன்னும் தெரியல மச்சி ஆனா இப்ப ரொம்ப கஷ்டமா இருக்கு என அக்காவின் திருமணத்தில் அழுத கோபி,தன்  கால் உடைந்த மகளை பல மணிநேரம்  மடியிலே வைத்திருந்த நரிக்குறவர் ஒருவர் என மூன்றும் எனக்கு
ஏன் இந்நேரம் தோன்ற வேண்டும்?.

மார்கழி மாத பனிக்காலைகளில் கோலப் பொடியையும், கார்த்திகை மாத அந்திக்கருக்கலில் அகல் விளக்குகளையும் விற்றுக் கொண்டிருக்கும் ஜோதி அக்கா. பள்ளி முடித்து வந்ததும் அவங்க கடையிலதான் எனக்கு வேலை.கோலப் பொடிகளை பாக்கெட் போடும் பொழுது எல்லா வண்ணங்களும் ஒன்றொடொன்று கலந்து உள்ளங்கை இரண்டிலும் அது பாட்டுக்கு ஏதோ வண்ணத்தில் கிடக்கும். அவர் கணவர் இறந்த தினத்தன்று பாடை கட்டி பந்தல் போடும் வரை பேச்சு மூச்சின்றி கிடந்தார். சவத்தை எடுத்து மயானம் நோக்கும் போது ஜோதி அக்கா ஆக்ரோஷமாக கத்த தொடங்கினார்.

'அவரில்லாம என்னால இந்த உலகத்துல வாழ முடியாதுடா' என என் அருகில் வந்து கீழே சரிந்தார்.

எங்கேனும் எரிந்துக் கொண்டிருக்கும் அகல் விளக்கைப் பார்க்கும்போது ஜோதி அக்காவின் வாழ்வினுடைய மகிழ்ச்சியின் 
குறு ஒளியும் அவர் வாழ்கையில் வந்த அதீத இருட்டும்
சட்டென வந்து போகும்.

 
மண்டபத்தில் நுழைந்ததில் இருந்து எங்களை நன்றாய் கவனித்த கோபி, தன் அக்கா கழுத்தில் தாலி ஏறியவுடன் தேம்பி அழ ஆரம்பித்து விட்டான். 'சின்ன வயசுல ஒன்னும் தெரியல மச்சி இப்ப கல்யாணம் ஆகிடுச்சு எனக்கும் என் அக்காவுக்கும் உள்ள தூரம் இனிமே குறைஞ்சிடும்' என வாழ்வியலின் தத்துவம் ஒன்றை எளிமையாய் சொல்லி முடித்தான்.

எனக்கும் என்'அக்காவிற்கும் இடையில் இருந்த தொலைவும் அப்படித்தான் பள்ளிக்கு செல்லும் பொது என்னை வழி எங்கும் தலையில் கொட்டியபடியே என் அக்கா அழைத்து செல்லும். பள்ளி முடிச்ச ரெண்டு வருஷத்துல அக்காவிற்கு திருமணம் முடித்தார்கள். அடுத்த இரண்டு ஆண்டில் அக்கா கையில் ஒரு குழந்தை எல்லாமே தூரம் ஆகிப்போனது.


அக்கா  தம்பி இருவருக்கும்  இடையில் இருக்கும் உறவு மட்டும் நீண்ட நாட்கள் நிலைப்பதே இல்லை.

      'உறவிருந்தும் ஏதுமில்லாமல் இருப்பவன் ஏதுமில்லாமலே இருக்கலாம்'.


எங்கள் தெருவில் இருந்த ஒரு பாட்டிக்கு என்பது வயதிற்கு மேல் இருக்கும். எப்போதும் ஒரு பெரிய மூட்டையை தலையில் வைத்துக்கொண்டே சாலையில் திரியும்.அதோட பாஷை யாருக்கும் புரிஞ்சதில்லை. காலையிலும் மாலையிலும் குழாய் அருகில் உட்கார்ந்துக்கொண்டு குளித்துக்கொண்டிருக்கும் அருகில் போனால் கெட்ட வார்த்தையில் அர்ச்சனைதான்.

கிழவி யார்ன்னு ஊர்க்காரங்க யாருக்கும் தெரியல. அது பாட்டுக்கு வரும் போகும். டீ கடைக்கிட்ட நின்னா பன்னையும் இட்லியையும் வாங்கி கொடுத்தா சாப்பிட்டிட்டு ஏதேதோ சொல்லிட்டு திரியும். ஒரு நாள் அந்த கிழவி தெருமுனையில் செத்துக் கிடந்தது.


காயமில்லாம இறந்து போன ஒரு அணிலைப் போல ரொம்ப சாதுவா கிடந்தது கிழவியோட பிணம்.


எல்லாரும் சேர்ந்து குப்பைவண்டியில வச்சு மயானத்துக்கு கொண்டு போய்ட்டாங்க. மூட்டையில கிடந்த துணி மணிகளையும் சுருக்கு பையில் கிடந்த நூத்தி சொச்சம் பணத்தையும் வெட்டியான் எடுத்து கிட்டதா எல்லாரும் பேசிக்கிட்டாங்க.

'இப்படி எத்தனை எத்தனை உயிர்கள்  உறவுகளை  விட்டு எங்கோ ஒரு மூலையில் எதையோ தேடி திரிகிறார்கள்'.

மொட்டப் பொண்ணும் அப்படித்தான் கடைகிட்ட வந்து நின்றுக்கொண்டு ரஸ்னா, மோர் என வாங்கித்தரச் சொல்லும். அவள் இருக்கும் போது தெருவெல்லாம் நடிகர்களாய் திரிவார்கள் நான் அசோகன் என் நண்பன் மனோகரன், பெண்களுக்கு நிர்மலா டீச்சர் அறுபது எழுபதுகளின் நடிகர்களின் பெயர்களை எல்லோருக்கும் அடைப்பெயராய் வைக்கும். மொட்டைப் பொண்ணுக்கும் உறவுன்னு யாருமில்லை எல்லோருக்கும் வீட்டு வேலைச்  செய்யும்.

நெடு நாள் கழித்து மீண்டும் பார்த்தேன் நம்பியார் கூட நடந்து போய்க் கொண்டிருந்தாள். என்னை பார்த்ததும் அசோகன் என
அழைத்துவிட்டு கையை நீட்டி சிறு கோழிக்குஞ்சுபோல் தலையை சாய்த்து ரஸ்னா என்றது.

உறவுகளின்றி கிடப்பவர்கள் நினைவுகளை பகிர்ந்துக் கொள்ளவென ஏதாவது ஒன்றை வைத்திருக்கிறார்கள். ஜோதி அக்காவினுடைய அகல் விளக்கொன்று என்னிடம் இருப்பதைப்போல..


இது போல நேரங்களில் கே.ஸ்டாலின் அவர்கள் எழுதிய கவிதை ஒன்றை எடுத்து படித்து தனிமையின் குளிரைப் போக்கிக் கொள்வேன்.

முழு நிலவை தரிசித்தபடி கிடத்தப்பட்டிருக்கிறது உனது உடல்
மனித வாழ்கையின் விசித்திரங்களை கேலி
செய்யும் பைத்தியமொன்றின் நடனமென உனது உடலை
கடந்து போகின்றன வெவ்வேறு வடிவிலான
வெண்மேக பிம்பங்கள் நீண்ட யுகத்தின்
ஒற்றை வினாடியென ஊர்ந்து செல்கிறது
பிணத்துடனான இவ்விரவு நாளை
உன்னை தேடி அலையும் உன் முற்றத்து

வெயிலிடம் சொல்லிக்கொள்வதற்கென
உனது  பெருமை பேசிக்கொண்டிருக்கும் எங்கள்
குரல்களை பதிவு செய்து கொள்கிறது இக்குளிர்காற்று
உனது காலடியில் புகையும் வத்தியின் வாசனையில்
மயங்கி கிடக்கும் தெருநாய்க்கு வாய்க்கிறது
ஒரு சுகந்தமான இரவு  உன்னை அடக்கம் செய்து விட்டு
ஆளுக்கொரு திசையென பிரிந்து செல்லும் எங்களிடம்
உன் நினைவுகளை பகிர்ந்துக் கொள்ளவென
நிலவொன்றை விட்டுச்செல்கிறாய்
பௌர்ணமி அன்று இறந்த நீ.


இன்னும் பருகுவோம்
பா.சண்முகம்

Comments

Popular posts from this blog

கண்ணாடி நாட்கள் (சிறு கதை )

விட்டில் பூச்சி(சிறுகதை)