விட்டில் பூச்சி(சிறுகதை)
அதிகாலை தென்னங்கீற்றுக்களின் இடைவெளியில் சூரியன் எட்டி பார்த்துகொண்டிருந்தான். கடிகாரத்தில் நேரம் சரியாய் 6.40யை கடந்திருந்தது.
"சரி... என்னப்பா? ஆளாளுக்கு ஒருத்தர் வாயை ஒருத்தர் பார்த்துகிட்டு இருக்கீங்க. சட்டு புட்டுன்னு ஆக வேண்டிய காரியத்தை பாருங்கப்பா!!" கூட்டத்தில் இருந்த முருகேசன் தன் கையில் வைத்திருந்த துண்டை உதறியவாரே சொல்லி முடித்தார்.
"அண்ணே! உங்களுக்கே தெரியும், மூத்த புள்ள நான் இப்படி குத்து கல்லுமாதிரி இருக்கும் போது என்னைய விட இளையவன் சுடலை அவனுக்கு சொத்துல அதிகமா எழுதி வச்சா என்ன அர்த்தம் ?" சத்தமாக சொல்லி முடித்தான் முத்தையா
"அது சரி... முத்தையா உங்க அப்பா நல்ல சிவம் ஊர்ல எவ்ளோ பெரிய மனுஷன், இப்ப அவர் இருக்குற நிலையில நீ இப்படி பேசுனா அவர் மனசு எவ்ளோ பாடுபடும்."
சுவரின் மூலையில் சோகமாக அமர்ந்திருந்தான் சுடலை. நல்ல சிவம் கட்டிலில் பேச்சு மூச்சின்றி கிடந்தார். புதியதாய் பிறந்த விட்டில் பூச்சி ஒன்று அவரை சுத்தி சுத்தி வந்துகொண்டிருந்தது. நல்ல சிவம் வாயில் ஊற்றப்பட்ட பால் வாசனை அந்த அறை முழுவதும் பரவிக்கிடந்தது ,
"அதெல்லாம் முடியாதுன்னே! நீங்களே சுமுகமா பேசி முடிச்சி வச்சிடுங்க", கராராய் பேசினான் முத்தையா.
"ஏம்ப்பா சுடலை இங்க இவ்ளோ பிரச்சனை நடந்துகிட்டு இருக்கு ஒம்பாட்டுக்கு சும்மா இருந்தா எப்படிப்பா ? வாயை தொறந்து எதாவது பேசு,"
"நான் எல்லாத்தையும் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன் அண்ணே! எனக்கு எந்த சொத்து பத்தும் வேணாம். எல்லாத்தையும் அண்ணனுக்கே கொடுத்துடுங்க. நான் என் சொந்த கால்ல நின்னு பொழைச்சிகிறேன்." தீர்க்கமாக சொல்லி முடித்தான் சுடலை.
"என்னப்பா முத்தையா இப்ப உனக்கு திருப்தியா ?" குரலை உயர்த்திச் சொன்னார் முருகேசன்.
"இப்படி வெறும் வாய்ல சொன்ன என்ன பண்றது? பத்திரத்தை என் பேருக்கு மாத்தி தர சொல்லுங்க." நல்ல சிவத்தின் வாழ்க்கை விட்டில் பூச்சியாய் அடங்கிற்று. மாலை வெட்டியானின் சைக்கிள் நல்ல சிவம் வாசலில் நின்று கொண்டு இருந்தது.
சாணம் பூசி மொழுக பட்ட காரை சுவரின் ஓரம் இறகொடிந்து செத்து கிடந்தது அந்த விட்டில் பூச்சி.....
சாணம் பூசி மொழுக பட்ட காரை சுவரின் ஓரம் இறகொடிந்து செத்து கிடந்தது அந்த விட்டில் பூச்சி.....
முற்றும்
பா.சண்முகம்
Comments