கண்ணாடி நாட்கள் (சிறு கதை )


ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தின் மேல் போய்கொண்டிருந்தது அந்த ரயில். ஜன்னலோரத்தில் சோகமாய் உட்கார்த்திருந்தான் செழியன். ஜன்னலுக்கு வெளியே வாணிபத்திற்காக சில கப்பல்கள் மிதந்து கொண்டிருந்தன. அவனுக்கு எதிரே ஒரு குடும்பமும் பயணித்து கொண்டிருந்தது.
அவன் அருகில் இருந்த பெரியவர் ஒருவர் வாயில் வெற்றிலையை குதப்பியவாறே பேச ஆரம்பித்தார்,
"என்ன தம்பி! ரொம்ப சோகமா இருக்கீங்க!!," ஏதாவது பிரச்சனையா? சொல்லுங்க தம்பி''. எனக்கு சாமுத்திரிகா லக்ஷணம் தெரியும், உங்களைப் பார்த்தா பெருசா எதையோ இழந்த மாதிரி தெரியுது. அதான் கேட்டேன்.”
மெல்ல பேச ஆரம்பித்தான் செழியன், "ஆமாங்கையா யாருக்கும் வராத பிரச்சனை எனக்கு வந்திருக்கு".
”என்ன தம்பி சொல்றீங்க...? என்னாச்சு கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லுங்களேன்.”
இருக்கையில் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார ஆரம்பித்து,"என் பேரு செழியன், சென்னை தான் சொந்த ஊரு, நானும் யாழினியும் காதலிச்சி கல்யாணம் பண்ணிகிட்டோம். கோவிலை கடக்கும் போது எதேச்சையா  நம்ம கை நெஞ்சுக்கும் உதட்டுக்கும் போகும்ல அந்த மாதிரிதான் யாழினி கிட்ட எதேச்சையா என் காதலை சொன்னேன்” எனத் தன் கதையைச் சொல்லத் தொடங்கினான்.
செழியன் சொல்வதை இடைமறித்த பெரியவர், "இப்ப எங்க தம்பி உங்க மனைவி..? ஏதாவது விபத்துல.. ”எனச் சொல்லி முடிக்கும் முன்பாக முந்திக்கொண்டான் செழியன்.
”ஐயா.! அதெல்லாம் ஒண்ணுமில்லை, அவங்க இருக்காங்க. எனக்கும் யாழினிக்கும் குழந்தை இல்லை, அதுதான் பிரச்சனை.”
”என்ன தம்பி, இதெல்லாம் ஒரு பிரச்சனையா.? நல்ல டாக்டர் கிட்ட போனா சரியாக போகுது.”
’’எல்லாம் பார்த்துடேங்க... நல்ல தகவலே இல்லை...”
”என்னவாம் பிரச்சனை.? டாக்டர் என்ன சொன்னாங்க.?”
”யாழினி கிட்ட எந்த பிரச்னையும் இல்லையாம், என்கிட்டதான் பிரச்சனை. ஸ்கூல் படிக்கும் போது விளையாட்டுல நான் தான் முதல்ல வருவேன். அதுல வந்த பிரச்சனைதான் இது. ஒரு நாள், கபடி போட்டில விளையாடும் போது எனக்கு தெரியாம நடந்திருக்கு, சின்ன காயம்னு நினைச்சேன். இப்ப இங்க வந்து நிக்குது ஐயா.”
”சரிப்பா, உன் மனைவி இப்ப எங்க இருக்காங்க.?”
 
சிறு மௌனத்திற்கு பிறகு பேச ஆரம்பித்தான் செழியன். ”உண்மையான  காதல்ங்கிறது, புரிதலும், விட்டு கொடுக்குறதும் தானே சார். நான் யாழினியை காதலிச்சது மட்டுமல்ல, அவ காதலையும் புரிஞ்சிகிட்டேன் அதனால தான்,  யாழினி சந்தோஷத்துக்காக என் காதலை விட்டுகொடுத்தேன். அவளும் என்னைப் புரிஞ்சுக்கிட்டு, வருத்தப்பட்டு ஏத்துகிட்டா. அதனாலதான் நான் காதலிச்ச, இல்லல்ல நான் உயிர்னு நினைச்ச யாழினியை, சுந்தர்க்கு கல்யாணம் பண்ணி வச்சேன். சுந்தர் ரொம்ப நல்லவன் ஐயா”.
   பேசிக்கொண்டிருக்கும் போதே நினைவுகள் பின்னோக்கிப்      பறந்தது ,    சென்னை பிரசவ ஆஸ்பித்திரியில் வலியில் துடித்து        கொண்டிருந்தாள் வர்த்தினி. அவள் தான் சுந்தரின் முதல் மனைவி.   எல்லா கணவன் போல தான் சுந்தரும், தன் குழைந்தையின் முதல்   முத்ததிற்காக காத்து கொண்டிருந்தான்.

      நேரம் சரியாக அதிகாலை இரண்டு மணி,
அறையிலிருந்து நர்ஸ் வேகமாக வெளியேறினார், பின்னாடியே டாக்டரும், ”மன்னிச்சிடுங்க சுந்தர், பனிக்குடம் உடைஞ்சிருக்கு வழியிலே 'குழைந்தையும் தாயையும் எவ்வளவோ போராடியும் காப்பாத்த முடியல... ஐ அம் சாரி...”
   சரிந்து கிடந்தான் சுந்தர் ,செழியன் அவனை தேற்றி         கொண்டிருந்தான்,நாட்கள் சில கிழிபடாமலே இருந்தது நாட்காட்டியில்'
”என்ன தம்பி !இவ்ளோ பெரிய காரியம் பண்ணிருக்கீங்க'!!”  
பெரியவரின் வார்த்தைகள் அவனை மீட்டுக் கொண்டுவந்தது 
”ஆமாம் ஐயா ! நம்ம  வாழ்க்கையை  கண்ணாடி போலதான் நகர்த்திட்டு போய்கிட்டு இருக்கோம் ஒரு சில இடங்கல்ல விரிசல் விழுந்தாலும் லேசா நகர்றோம் .நிறைய பேர் உடைச்சிடுறாங்க நான் நிறைய பேர் ல ஒருத்தன் ஐயா ,”
 சிறு அமைதிக்கு பின் செழியன் ஜன்னலை வெறித்து பார்த்து கொண்டிருந்தான் .யாழினி பேசியது நினைவுக்கு வந்தது
இன்னைக்கு கோவிலுக்கு போகலாம்ங்க ,ம் எந்த கோவில் ?ம் ராமேஸ்வரம் வேண்டுதல் இருக்குங்க ப்ளீஸ் 'வேண்டாம் ன்னு சொல்லிடாதிங்க !!''
”சே! .நான் எப்படிமா வேண்டாம்னு சொல்லுவேன்,ஏங்க !இந்த பாம்பன் பாலத்து கடல்ல சில்லறையை போட்டா நாம நினைச்சது நடக்குமாமே ?உங்களுக்கு தெரியுமா?'' செல்லமாய் கேட்டாள் யாழினி 'எனக்கு தெரியலைமா .வேணும் னா உன் ஆசைக்காக நீயும் போடேன்”
 மொத்த சில்லரையும் அள்ளி கொடுத்தான் செழியன் ,ஜன்னல் வழியே எறிந்த நாணயம் காதுக்கு கேட்காத  ப்ளக்'!! எனும் சிறு சத்ததோடு கடலில் விழுந்து மறைந்தது .

பக்கத்துக்கு பெட்டியில் தான் யாழினி சுந்தரோடு கோவிலுக்கு சென்று திரும்பி கொண்டிருந்தாள்,யாழினி  தானும் செழியனும் சில்லறையை எறிந்த இடத்தை பார்த்து கொண்டே இருந்தாள்,
”என்னாச்சு ?யாழினி 'சுந்தர் வினவ
''இல்லை ஒண்ணும் இல்லை” யாழினி சமாளித்தாள் ,

”சரி தம்பி இப்ப எங்க போறீங்க?என்ன பண்றதா உத்தேசம் ?” பேச ஆரம்பித்தார் பெரியவர்'
கண்களில் இருந்த நீரை துடைத்த வாரே '' எல்லாரும் வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்காங்க நான் வாழ்க்கைய தேடி போய்கிட்டு இருக்கேன்''என சொல்லி முடித்தான்  ,அவன்  இறங்கும் இடம் வந்தது வெறுமையாய் உணர்ந்தான்  செழியன் ,யாழினியின் பெட்டியை தாண்டி நடந்தவன் ,குளிர் காற்றில் நடந்து போய்கொண்டிருந்தான்,

உச்சி வானில் தனிமையில் இருந்த நிலவும்  அவன் கூடவே நடந்து வந்து கொண்டிருந்தது ..

Comments

Popular posts from this blog

கோப்பையை பருகும் தேநீர்

விட்டில் பூச்சி(சிறுகதை)