உதவி (சிறுகதை )


                                

பறவைகள் அனைத்தும் தன் குஞ்சுகளுக்கு தன்னால் முடிந்த அளவிற்கு

இரையை ஈட்டிக்கொண்டு சென்ற மாலை நேரம் ,

கதவை வேகமாக முன்னுக்கு தள்ளி உள்ளே நுழைந்த செல்வி புத்தக

பையை வேகமாக தூக்கி எறிந்தாள்.

ஏண்டி இவ்ளோ கோபமா இருக்க?இது செல்வியோட அம்மா கோகிலா 

இல்லமா எங்க பள்ளில ''ஆண்டு விழா வருதும்மா அதுல்ல நிறைய

போட்டிங்க வைக்கிறாங்க ''

அதுல பேச்சு போட்டில ..டீச்சர் என்ன கலந்துக்க சொல்லி கட்டாயபடுத்தி

என் பேர் கொடுத்துட்டாங்க ..அதான் ஒரே டென்சன் ம்மா ..சரி நீ போய்

முகம் கழுவிகிட்டு வந்து இந்த காப்பியகுடி.நான் அப்பா கிட்ட சொல்றேன் .

மூர்த்தி செல்வியின் அப்பா இரவு வீடு திரும்பியதும் கோகிலா பள்ளி

விசயத்தை சொல்ல ,,சரி நாளைக்கு நம்ம வீட்ல வேலை செய்யுற

கற்பகம் பையன வரசொல்லு அப்படின்னு சொல்லிட்டு தூங்க

போய்விட்டார் மூர்த்தி .

இருளும் ஒளியும் சண்டை இட்டு இருள் தோல்வியை தழுவிய காலை

நேரம் ,

செல்வி பள்ளிக்கு சென்று விட்டிருந்தாள்.கற்பகம் பையனை வர

சொன்னேனே என்னாச்சு ?சொல்லிடேங்க வந்துடுவான்

அவர்கள் பேசிகொண்டிருக்கும் பொழுதே கதவு தட்டும் சத்தம் ...சார்

...சார் ....ன்னு குரல் வர கோகிலா கதவை திறந்தாள் வாப்பா சரவணா

..உள்ள வா உன்ன பத்திதான் பேசிகிட்டு இருந்தோம் 'இந்த இந்த காப்பி ய

குடி 'இல்லமா வேண்டாம் 'இந்தாப்பா புடிப்பா' கோகிலா விடாமல்

அவன் கையில் காப்பி டம்ளரை திணித்தாள்.மூர்த்தி வந்தவுடன் வாப்பா

சரவணா!''எப்ப வந்த?இப்பதான் சார் வந்தேன்,என்ன வர சொன்னதா

அம்மா சொன்னாங்க என்ன விஷயம் சார்?அது ஒண்ணுமில்லப்பா

செல்வி பொண்ணுக்கு அவங்க பள்ளி ல ஆண்டு விழாவாம்,பேச்சு

போட்டிக்கு அவ பேசணுமாம் அதான் உன்ன எழுதி கொடுக்க கூப்பிட்டேன்

'நான் எப்படிங்க இத'?எனக்கு தெரியும்ப்பா போன பொங்கல் அன்னைக்கு

நம்ம நகர் பேச்சு போட்டில நீ பேசுனத நான் பார்த்தேன்  நான்

அசந்துட்டேன்'அதான் உன்ன இதுக்கு கூப்பிட்டிருக்கேன் .என்று சொல்லி

அவர் வேலைக்கு கிளம்பிவிட்டார் .

சரிம்மா! நான் சாயந்தரம் வரேன் 'என்ன தலைப்புன்னு 'சொல்லுங்கன்னு

வாங்கிட்டு சரவணன் கிளம்பிட்டான் .


மாலை செல்விக்கு சரவணன் எப்படியெல்லாம் பேசவேண்டும் எங்கு

நிறுத்தி எங்கு குரலை கூட்ட வேண்டும் என அழகாக சொல்லி

கொடுத்தான் ,செல்வி அழகாக தேறிவிட்டாள்.

ஆண்டுவிழா நடந்து கொண்டிருந்தது அதனை அவ்வூர் கேபிள் டிவி

காரர்கள் அதனை டிவி இல் ஒளி பரப்பினார்கள் .செல்வி பேசும் நேரம்

வந்தது,கைத்தட்டலோடு பேச்சை தொடங்கினாள்''ஒவ்வொரு

வரிகளுக்கும் கைத்தட்டல்,அவள் ஆசிரியர் நினைத்தது போலவே

செல்விக்கு முதல் பரிசு .

காலை நேரம் முழுவதும் வகுப்பில் பேசி காண்பித்திருந்தாள்.

விழா முடிந்து மாலை வீடு திரும்பியதும் கோகிலா செல்விக்கு ஆரத்தி

கரைத்து வரவேற்றாள்.

''எல்லார் கண்ணும் என் புள்ள மேலதான்'' என சொல்லிகொண்டே

ஆரத்தியை கொட்டி விட்டு சென்றுவிட்டாள்.

இந்த மகிழ்ச்சியில் சரவணனை செல்வியோடு சேர்ந்து அனைவரும்

மறந்தே போயினர் .

மகிழ்ச்சியில் கோகிலா பாயசம் செய்து கொண்டிருந்தாள்.,

இவை நடந்து கொண்டிருக்கும் போதே,,

 ''ஜன்னலில் தெரிந்த சுய ஒளி இல்லாத நிலவு சூரியனின்
  ஒளியை வாங்கிகொண்டு பிரதிபலித்தது''.,

          -முற்றும்-
                           பா ;சண்முகம் 

Comments

Popular posts from this blog

கோப்பையை பருகும் தேநீர்

கண்ணாடி நாட்கள் (சிறு கதை )

விட்டில் பூச்சி(சிறுகதை)