அகம்புறம்

      
நன்றி ஆனந்த விகடன் இதழ் -12.03.2008
                           அகம்புறம் .
                              
          வண்ணதாசன் .

ஆறு 'பி 'இல் இருந்து ஏழு 'பி 'க்கு போனேன் .ஜான்சன் சார்.ஜான்சன் சாமுவேல் என்பது முழுபெயர் .

ஹோம் வொர்க் என்று ஒன்று எல்லோருக்கும் கொடுப்பார்கள் .அதில் தான் பரமண்டல ஜெபம்இருக்கும் .ஹை ஸ்கூலில் இருந்து ஆறாம் கிளாஸ் வரை ஆசிரியர் யார் யார் ,பெயர்
 
இன்னின்ன.எப்போது கால் பரீட்சை என்றைக்கு லீவு என்பதல்லாம் அதிலிருந்து மட்டுமே தெரியும் .
ஜான்சன் சார்வா பற்றி ஏகப்பட்ட கதைகள் உண்டு .அவர் கோட்டு பைக்குள் எப்போதும் அல்வா வைத்திருப்பார் என்றும் ,கைகுட்டையால் முகம் துடைப்பது மாதிரி யாருக்கும் தெரியாமல் அல்வாவை அப்போதைக்கபோது சாப்பிட்டு கொள்வார் என்பது ஒன்று .இன்னொன்று அவருடைய
முழுக்கை சட்டைக்குள் ,சுண்டுவிரலையும் விடப்பொடிசாக,டவுன் ஆர்ச் பக்கம் வாங்கிய பிரம்பு
ஒன்றைச்சொருகி வைத்திருப்பார்.அதை எப்போது உருவி யாரை அடிப்பார் என்பதை சொல்லவே
முடியாது என்பதும் .
எல்லா வாத்தியார்களைப்பற்றியும் சில கதைகள் இருக்கிறது மாதிரி தான் அவை .எல்லா கதைகளையும் மாதிரி சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவை அப்படி சொல்லப்பட்டனவே தவிர,அதில் உண்மை களோ,ஒரு காலத்தில் உண்மையாக இருந்திருக்ககூடிய
அடையாளங்களோ கூடக்கிடையாது .
நீங்கள் என்னை நம்ப வேண்டும் .ஏழு 'பி 'நான் கிளாஸ் லீடராக
இருந்திருக்கிறேன் ,நன்றாக படிக்கிற பையன் தான் அப்போது கிளாஸ் லீடர் .படிப்பது தவிர ,நன்றாக குட்டவும் தெரிந்திருக்க வேண்டும் .
ஜான்சன் சார் இரண்டு தண்டனைகள் கொடுப்பார் ,ஒன்று தப்பு செய்தவன் இரண்டு கைகளையும் தலைக்கு மேலாக தூக்கி கொண்டே
 நிற்க வேண்டும் ,அல்லது கிளாஸ் லீடர் கையால் குட்டு பட வேண்டும் .
குட்டுவது எனக்குத்தான் பெரிய தண்டனையாக இருந்தது .
எத்தனை பேரை எத்தனை தடவை தான் குட்டுவது வலது கை  மொழி மொழியாய் எனக்கு தான்  ரொம்ப வலிக்கும் சில சமயங்களில் ..
பிரும்மராஜனின் வீட்டில் நடமாடும்போது  ஏழு 'பி' தான் எனக்கு ஞாபகம் வந்தது .மலை பிரேதேச வீடுகளில் குளிருக்கு அடக்கமாக இருக்கிற வசதிக்காக தரை தளங்களிலேயே  பாளம்பாளமாக  மர கட்டை பதித்திருக்கிறார்கள்.ஏழு 'பி ' மலை பிரதேசத்தில் எல்லாம் இல்லை .
அதே தெற்கு புது தெருவில் தான் இருந்தது ,ஆனால் அதற்க்கு கீழே ஓடுகிற பெரிய வாய்க்காலை மூடி,வெகு நேர்த்தியான  மர பலகைகளால்
அடைத்து வைத்திருந்தார்கள் .அப்போதெல்லாம் எல்லா வாய்க்காலிலும்
தண்ணீர் ஓடும் 
,கீழே ஓடுகிற தண்ணீரில் வகுப்பே குளிர்ச்சியாக இருக்கும் .
ஜான்சன் சாருக்கு கையெழுத்துக்கு மேல் மிக பெரிய அக்கறை ,அதே போல் இலக்கணத்தின் மேலும் ,அவர் சொல்லி கொடுத்த வரி வடிவங்களையும்  இலக்கணத்தையும் ஒழுங்காக கற்று கொண்டவர்களை ,அவர் களுடைய கையெழுத்தை வைத்தே கண்டுபிடித்துவிடலாம் 'ஜான்சன் சார் கிட்ட படிச்சியா டே ?'என்று
எழுத்தை பார்த்தே சொல்லி விடுவார்கள் .
வெங்கட்ட ரமணன்  என்று ஒரு சகா.மூக்கு நீளமாக இருக்கும் .
அவனுடைய கையெழுத்து அவ்வளவு அழகாக இருக்கும் ,அப்புறம் தான்
என்னுடையது எல்லாம் .என் மூக்கு பற்றி பேசாமல் இருப்பது நல்லது .
வியாச நோட்டுகளைஎல்லாம் நானும் வெங்கட்ட ரமணனும் எடுத்துகொண்டு போய் ஜான்சன் சார் வீட்டில் வைப்போம் .
ஒரு கிறிஸ்துவ வீட்டின் அழகோடும் சுத்ததோடும் சாருடைய வீடு இருக்கும் .ஜான்சன் சாருடைய மனைவியும் டீச்சர் தான் 'தெய்வானை மகனா நீ ?'என்று என்னிடம் கேட்டார்கள் ,என்னுடைய அம்மா எப்படி அவர்களிடம் படித்திருக்க முடியும்  என்று தெரியவில்லை .
'குட்டை டீச்சர் கிட்ட நான் படிச்சிருக்கேன் 'என்று அம்மாவும் சொல்லி இருக்கிறாள் ,பாண்டவங்களும் உப பாண்டவங்களும் போல அவ்வபோது
ஒன்றுக்குள் ஒன்றாக எத்தனையோ அழிப்பாங் கதைகள் போட்டு கொண்டே செல்வதால்தான் ,வாழ்க்கை தொடர்ந்து இன்னும் தன் அடிப்படை சுவாரஸ்யத்தை இழக்காமலேயே இருக்கிறது .

அது ஒரு டயோசீசன்  பள்ளி கூடம் என்பதெல்லாம் பின்னால் தானே தெரியும் ,ஆனால் அதற்கு முன்பே ஏதோ ஒரு வகையில் மனம் ,கிருஸ்துவை அறிய துவங்கி விட்டு இருந்தது ,இயேசுவின் முகம் இன்று வரை தொடர்ந்து ஈர்த்து கொண்டுதான் இருக்கிறது ,அதற்க்கு எல்லாம் அடிப்படையான படங்களை முக்கியமாக அந்த' கெத்சமனே'
 
இயேசுவை எல்லாம் ஜான்சன் சார் வீட்டில் தான் பார்த்தேன் .

மார்க்கு எழுதின சுவிசேஷம் ,மத்தேயு எழுதின சுவிசேஷம்  என்றல்லாம் மாரல் வகுப்பிற்கு கொடுப்பார்கள் .
அப்போதெல்லாம் ,பாடங்களை தவிர,என்னென்ன வகுப்புகள் எல்லாம் பள்ளிகூடத்தில் இருந்திருகின்றன .மாரல் வகுப்பு ,C.T.வகுப்பு (குடிமை பயிற்சி )என்று அழகான தமிழும் (CITIZEN SHIP TRAINING)என்றும் அந்த பீரியடை சொல்வார்கள் .வெள்ளி கிழமை கடைசி பீரியட் என்றால் LDS-பீரியட் (Literary Debating Society)அதில் தான் பேச்சு போட்டி ,பாட்டு போட்டி எல்லாம் நடக்கும் .

ஆல்வாரப்பனும் இரத்தின சபாபதி எல்லாம் பாடுவது அந்த பீரியடில் தான்  .இப்போது கூட கேட்கிறது ,ஆழ்வாரப்பனின் 'செந்தமிழ் தேன் மொழியாள்' பாட்டு.'சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே 'என்று 

ஆழ்வாரப்பன் பாட ஆரம்பிக்கும் போது,அவன் கண்கள் மூட ஆரம்பித்து ,தலை பின்னுக்கு சாய்ந்து விடும் .முழு பாட்டையும் அப்படியே பாடி முடித்த பிறகு தான் ,கண் திறந்து ,முகம்  சம தளத்துக்கு  வந்து எங்களை
எல்லாம் பார்க்கும் .நாங்கள் கைகளை தட்டி கொண்டே அவனை பார்ப்போம்.எனக்கு அவன் பாடின பிறகு கைதட்டும் போதெல்லாம்  ஒரு
மாதிரி அழுகை தான் வரும்.
ரத்தினம் காசு கடையில் இருக்க ,ஆழ்வாரப்பனை காணவே காணோம் .
பாட்டை நம்மிடம் பத்திரமாக விட்டு விட்டுப்பாடினவர்கள்  காணாமல்
போய் விடுகிறார்கள் .
நான் தான் LDS செக்ரெட்டரி.ஒவ்வொரு -LDS பீரியட் பற்றியும் தனி நோட்டு ஒன்றில் குறிப்பு எழுதி சார் கையெழுத்துக்கு வைக்க வேண்டும் .
அப்புறம் அது ஹெட் மாஸ்டர் பார்வைக்கு போய் விட்டு வரும் .
இந்த LDS செக்ரெட்டரி வேலையாலும்,பாராமல் படித்து மனப்பாடம் செய்வது சுலபமாக இருந்தாலும் ,அதை விட கொஞ்சம் அமைதி யான பையனாக இருந்தாலும் ,ஸ்கூல் டே அன்றைக்கு போடுகிற தாவிதும்
கோலியாத்தும் நாடகத்துக்கு ப்ராம்ப்ட்டர் ஆக இருக்க வேண்டியது
ஆகிவிட்டது .

ஜெகந்நாதன் தான் தாவீது .இம்புட்டுப்போல எலி குஞ்சு போல இருப்பான்.
பெருமாள் கோவில் சந்நிதிதெருவில் சாரி என்று ஒரு சானிட்டரி இன்ஸ்பெக்டர் உண்டு .அவர் விட்டு பையன் .அருமையாக படிப்பான் .
அன்றைக்கு படித்த வேகத்தை பார்த்தால்,இப்போது ஏதாவது ஒரு
காலேஜில் ப்ரோபோசராக இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும் .

காற்றடித்தால் பறந்து போகிற தாவீது .அதற்க்கு நேர் எதிராக கோலியாத்தாக சுப்பையா .ஒரு மூட்டை நெல்லை தனியாளாக தூக்கி போடுகிற மாதிரி ,அப்போதே அவ்வளவு வளர்த்தி .
வசனம் ,மனப்பாடம் ஆகாமல் திக்கும் ,நான் மேடைக்கு பின்னால் இருந்து  உதவிக்கு போனது  அதிகமாக கோலியாத் சுப்பையாவுக்குதான்.
ரொம்ப நாசூக்கு.ஆண்டு விழா,விளையாட்டு விழா எல்லாம் முடிந்த பிறகு கூட ,நேரங்கெட்ட நேரத்தில் எல்லாம்  ஒரு வரி கூட மறக்காமல்
தாவீது கோலியாத் வசனங்கள் ஞாபகத்தில்  வந்து கொண்டே இருந்தன
ரொம்ப காலத்துக்கு .இன்றைக்கு வரைக்கும் நான் தாவீதும் இல்லாமல் கோலியாத்தும் இல்லாமல் ஒரு முன்றாவது குரலுடன் தான் பக்கவாட்டு
மேடைகளில் நின்று கொண்டு இருக்கிறேன் ,வசனங்கள் இன்னும்
பாடாய்த்தான் படுத்துகிறது.

ஏழாம் வகுப்பிலேயே கண்ணாடி போட்டாயிற்று .அந்த காலத்தில்
பள்ளி கூடத்தில் படிக்கிற பையன்களில் நான் ஒருத்தன் தான் கண்ணாடி
போட்டிருந்தேன் .வகுப்பில் போர்டில் எழுவது சரியாக தெரியவில்லை.
வாசிக்க கஷ்டமாக இருக்க ,வீட்டில் போய்ச் சொன்னேன் .
அன்றைக்கு ஏதோ விசேஷம்  அப்பா வீட்டில் இருந்தார்கள் (அப்பா வீட்டில் இருப்பதே பெரிய விசேஷம் என்பது வேறு )மத்தியானம்
சாப்பிடும் போது இதை பற்றி பேச்சு வந்தது .அப்பா உடனே கீழே போய் கொண்டிருந்த எறும்பை காட்டி'இது தெரியுதா ?'என்றார் .தெரிந்தது .
'இடது கண்ணை பொத்திகிட்டுப்பார்' என்றார் எறும்பு ஊர்ந்தது .
இப்போ 'வலது கண்ணை மூடிக்கோ ' என்றார் .
எறும்பு காணாமல் போய் விட்டது .

மறுநாள் கிருஷ்ணமூர்த்தி டாக்டர் .மூன்றாம் நாள் ஜெனித் ஆப்டிகல்ஸ் ,
நான்காம் நாள் கண்ணாடி போட்டாயிற்று.
தெரு தாண்டியதும் கழற்றி வைத்து விடுவேன் 'கண்ணாடி' என்று கேலி பண்ணுவார்கள் .நான் கோபப்பட்டால் 'கல்யாணின்னுதானே கூப்பிட்டேன் 'என்பார்கள் .இதற்காக இந்த வேலை .அதே போல பள்ளி கூடத்தில் இருந்து வீட்டுக்கு வரும் போதும் தெருவில் ஒரு குறிப்பிட்ட
தூரத்துக்கு,சாவடி பிள்ளை வீடு தாண்டினதும் கண்ணாடியை மறுபடி
போட்டுக்கொள்வேன் .இதையும்  கண்டு பிடித்து யாரோ கோள்மூட்டி விட்டு விட்டார்கள் .
மறுபடியும் வடக்கு வளவு சித்தப்பா தான் வந்து ஜான்சன் சார்வாளிடம்
சொன்னார்கள் ,எல்லா பையன்கள் முன்னாலும் மறுபடி கண்ணாடி போட  ஆரம்பித்தேன் .இன்று வரை கழற்றி வைக்கவில்லை .

மைதானத்துக்கு உள்ளே ஓடி திரியாமல் ,மைதானத்துக்கு வெளியே வேடிக்கை பார்க்கிறவனாகவே  இருப்பதால் ,அலகிலா விளையாட்டு எதுவுமே எனக்கு அண்மையில் வராது போயிற்று .
 
நான் ஓட்ட பந்தயக்காரனையோ,கால் பந்து விளையாட்டு க்காரனையோ
எழுத முடியாமல் போனதும் 'அந்த பையனும் ஜோதியும் நானும் 'எழுத
முடிந்ததும் அதனால் தான் .

ஓட்ட பந்தயம் என்றதும் பரமானந்தம் ஞாபகம் வருகிறது .அழகான கருப்பன் .ஏழாம் வகுப்புக்கு அவனுடைய வளர்த்தி அதிகம் தான் .
எங்கள் கிளாஸ் இல்லை  ஏழு 'சி'கிளாஸ்.பக்கத்து வளவில் எப்போதும்
வியாபாரத்துக்காக முறுக்கு சுட்டு கொண்டே இருப்பார்கள் .அதை ஒட்டின வகுப்பு .ஆண்டு விழாவில் ,விளையாட்டு விழாவில் எல்லாம்
பரமானந்தம்தான் .விக்டரி ஸ்டாண்டில் நிற்கிற மாதிரி,பந்தய கப்புகளுடன்  நிற்கிற மாதிரி எல்லாம் பரமானந்தத்தின் படம் தான் .
பள்ளி கூட மேகசினில் .இதை எல்லாம் எதற்கு இவ்வளவு சொல்கிறேன் என்றால் ,விளையாட்டு வீரர்களுக்கு இப்போது மட்டுமல்ல .அப்போதே மவுசு இருந்தது என்பதற்க்காகத்தான் .
மவுசு என்றால் சாதாரண மவுசா .ஏழாம் வகுப்பு படித்த பரமானந்தத்துக்கு
பக்கத்துக்கு வளவு பெண் பிள்ளைகளிடம் இருந்தும் ,அதற்க்கு
பரமானந்தம் இடம் இருந்து காதல் கடிதங்கள் பறந்தன என்றால் சாதாரணமா .

டிராயிங்  பீரியடும் தறி பீரியடும் மாறி மாறி வரும்  அருணாசலம் சார் தான் தறி வாத்தியார்.கொஞ்சம் சாய்ந்து சாய்ந்து நடப்பார் .நிஜமாகவே இரண்டு மூன்று தறி நெசவு செய்கிற நிலையில் இருக்கும் .ஒருத்தர் கூட
ஒரு நாளைக்கும் அதில் உட்கார்ந்து நெய்தது இல்லை என்றாலும் தறி சார் நெய்து காட்டும் போது ,ஓடம் ஓடின ஓட்டம் இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது .
தறி கிளாசில் ஒரு கிராப் நோட் தருவார்கள்,கட்டம் கட்டமாக இருக்கும் .
நெசவுக்குரிய டிசைனை அதில் பென்சிலால் வரைந்து நிரப்ப வேண்டும் .
அரை பென்சிலால் சதுரம் சதுரமாக நிரப்பி கொண்டே போய் ,அந்த
நிரப்புதலுக்குக்குள்ளேஇருந்து ஒரு டிசைன் மிதந்து ,மேலே வருகிற உணர்வு ,வரையும் போது நமக்கு உண்டாகிற குறு குறுப்புதான் அந்த நேரத்தின் ஜீவன் .பின்னால் ஒரு கதையை,அல்லது கவிதையை சரியாக
எழுதி முடிக்கிற போது உண்டான உணர்வும் அந்த தறி நோட்டு டிசைனும் உண்டாக்கின உணர்வும் ஒன்றுதான் ,வேறு  வேறாக எதையுமே அடைய முடியாது போல .முதலில் அடைந்ததையே மீண்டும்
மீண்டும் அடைகிறோம் .அல்லது இப்போது அடைந்ததன் ஒத்திகைகளையே ஏற்கனவே அடைந்து வந்திருக்கிறோம் .அப்படிதானா.
தறி நோட்டு போலவே இன்னொரு நெருக்கமான ஞாபகம் தேவேந்திரனுடையது .குன்னத்தூர் பொத்தை,விளாகம்,கருப்பந்துறைபக்கம் இருந்தெல்லாம் வந்து படிப்பார்கள்.எல்லாம் வயலில் பாடுபட்டு கொண்டே படித்து முன்னேறுகிற ஆர்வம் உள்ள பையன்கள் .ஆறுமுகம் என்கிற அமைதியான ஒரு பையன் நிச்சயம் படித்து எங்கேயாவது நல்ல நிலைமையில் இருப்பான் .தேவேந்திரன் படிப்பில் மோசம் என்று சொல்ல முடியாது அப்படியே இருந்தாலும் தறி கிளாசிற்கும் படிப்புக்கும்
அப்படி நேர்கோடு ஒன்றும் கிடையாது .

தேவேந்திரனை சுற்றித்தான் தறி கிளாசில் ஒரே கூட்டமாக இருக்கும் .
கெட்ட வார்த்தைக்கதைகள் அவன் அப்படி சொல்வானாம் .எனக்கு
கதைகள் கேட்க கொடுத்துவைக்கவில்லை.ஆனால் சரமாரியாக தேவேந்திரன் சொல்கிற வார்த்தைகள் காதில் விழாமலா இருக்கும் .
அப்படியே காதை பொத்தினாலும் லேசாக கேட்கட்டுமே என்று தானே
பொத்தியும் இருப்போம் .வண்டி வண்டியாக இவ்வளவு கெட்ட வார்த்தைகள் உலகத்தில் இருக்கிறதா எனக்கு ஒரு ஆச்சர்யம் .இதை
கெட்ட வார்த்தைகளா இல்லையா என்று உறுதி பண்ணி கொள்ளவும் எனக்கு ஆட்கள் இல்லை .
அப்புறம் நாலைந்து கெட்ட வார்த்தைகளை எந்த நல்ல வார்த்தைகளுக்கு
பதிலாக உபயோகிக்கவேண்டும்,எதற்கு எது மாற்று பெயர் என்று எல்லாம் குழப்பமிருந்தது .கடைசியில் எல்லா குழப்பங்களை யும் போல
அதுவும் ஒரு கட்டத்தில் தீர்ந்தும் போயிற்று .
கொஞ்சம் முன்னே பின்னே ஆனது பற்றி வருத்தப்பட ஒன்றுமில்லை .

தறி கிளாசை சொன்ன பிறகு டிராயிங் சார் பற்றி சொல்லாமல் விட முடியுமா ?ஆறு 'பி 'ஏழு'பி 'ஆனால் எட்டு 'சி ' ல்  போட்டு விட்டார்கள்.
எட்டு 'சி 'க்கு செல்லதுரை சார் தான் கிளாஸ் டீச்சர் .கி .செல்லதுரை
கி .சி .என்று இனிஷியல் போடுவார் .நோட்டுகளில்,ஆங்கில எழுத்து பொடியாக ,சிறு சிறு வடிவங்களில் அழகாக இருக்கும் ,சங்கிலி எழுத்தாக
போர்டில் அவர் எழுதி போட்டதை அழிக்கவே மனது வராது .கணக்கும் அருமையாக சொல்லிக்கொடுப்பார்.
சவரம் செய்து கொள்வதில் சிரத்தை இருக்காது அவருக்கு .தலையும் ஒட்ட வெட்டி இருப்பார் .அநேகமாக நரை முடிதான் எல்லாம் .
கட்டை குட்டையான தோற்றம் .குடும்ப கஷ்டத்தையும் வைத்துகொண்டு ,மனசார எல்லோரிடமும் சிரித்து கொண்டு இருக்கிற எத்தனை பேரை நாம் பார்க்கிறோம் .அதே மாதிரி ஒருத்தர் .அதிகம்
அலட்டி கொள்ள மாட்டார் .ஆனால் எல்லாம் சரியாக நடக்கும் படி
பார்த்துகொள்வார் ,யாரையும் திட்டன ஞாபகம் இல்லை ,மீசை இல்லாத
அந்த உருண்டை முகத்தில் 'உனக்காகத்தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன் 'என்று நம்மிடம் சொல்கிற மாதிரி ஒரு சிரிப்பு
இருந்துகொண்டே இருக்கும் .வாழ்க்கையை கி .செல்லதுரை சார் மாதிரி தான் எடுத்துகொள்ள வேண்டுமோ என்னவோ .

இந்த எட்டு 'சி 'யில் தான் நான் முதன்முறையாக தெய்வ சிகாமணி சாரை பார்க்கிறேன்.பக்கத்தில் வரும்போதே சிகரட் வாடை அடிக்கும் ,நல்ல வளர்த்தி .எக்கச்சக்கமான முடியைக்கோணல் வகிடு எடுத்து
சீவி இருப்பார் ,எப்போதும் பேன்ட்-ஷர்ட் தான் .ஆனால் தொளதொள வென்று அடுத்த ஆள் டிரெஸ்ஸை எடுத்து போட்டுக்கொண்ட மாதிரி இருக்கும் .ஒரு வித கட்டைக்குரல்.எம் .ஆர் .ராதா மாதிரியும் இல்லை .
அது மாதிரியும் சில சமயம் இருக்கும் .பூர்வீகம் நாகர்கோவில் .அடிக்கடி
'மனசில ஆச்சா 'என்று கேட்பார் .
அவராகவே பொடி வாங்கி தண்ணீர் சேர்த்து எல்லோருக்கும் வரைய கொடுப்பார் .மாவிலை போட்டால் அப்படியே ஒற்றை மாவிலை விளிம்பு நெளிந்து மடங்கி இருக்கும் .Free hand Drawing ல் மன்னன் .
சந்திரபாபு பாட்டு பாடுவார்.
எட்டாம் கிளாசில் ஆரம்பித்த தொடர்பு ,அடுத்த நான்கு வருடங்களிலும் ரொம்ப நெருக்கமாகவே இருந்தது .என்னை அவர் தொடர்ந்து கவனித்து
கொண்டே தான் வந்தார் .நானும் அவரின் கோடுக்காக மட்டும் இல்லை ,அவரையும் ஒரு மனிதராகவே ரசித்து கொண்டு வந்தேன் .
கலை அதை சார்ந்த மனிதனை எந்த ரூபத்திலாவது அடையாளங் காட்டி கொண்டே தான் வருகிறது .

எந்த ஒரு பள்ளிக்கூடத்திலும் ஓர் ஓவிய ஆசிரியர் மாணவர்களால்
விரும்பப்படாமல் இருந்திருக்கவே முடியாது என்றே தோன்றுகிறது .
தெய்வ சிகாமணி சாரிடம் நான் ஓவியம் கற்று கொண்டேனா இல்லை ,
ஒரு பென்சிலை அழகாக சீவ கற்று கொண்டேன் .நான் புழங்கிய எந்த
பென்சிலும் இதுவரை அழகாகவே இருந்து வந்திருகின்றது .பென்சில் சீவுவது ஒரு தியானம் எனில் ,என் ஜென் குரு தெய்வசிகாமணி சார் தான்

வாழ்கையில் பென்சில் மட்டுமே சீவிக்கொண்டு இருந்து விட முடியாது என்று நன்றாகவே தெரிகிறது ,ஆனால் ராகவை யங்காரை நினைத்துகொண்டோ ,ராமுடுவை நினைத்துகொண்டோ ,ஆழ்வாரப்பனை நினைத்துகொண்டோ ,தேவேந்திரனை நினைத்துகொண்டோ ,ஒரு பென்சிலை சீவி கொண்டு இருந்து விட முடியாதா என்று தான் தோன்றுகிறது .

பிளேடுகள் கூர்மையுடயவை என்பதால் ,சிறு கவனக்குறை என்றாலும் பென்சில் அழுத்தின விரலில் காயம் பட்டு சற்று ரத்தம் கசியும் .

நம்முடைய ரத்தம் நம்முடைய ஞாபகங்களுக்காக கொஞ்சம்
கசிந்தால் தான் என்ன ..?

Comments

Popular posts from this blog

கோப்பையை பருகும் தேநீர்

கண்ணாடி நாட்கள் (சிறு கதை )

விட்டில் பூச்சி(சிறுகதை)