திருப்பி அடிப்பேன் - சீமான் - புத்தக விமர்சனம்

படைப்பு: : 
பா.சண்முகம்

Thiruppi Adippen
சொரணை உள்ள ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய புத்தகம்! திருப்பி அடிப்பேன்.
ஈழத்தில் நடந்த இனப் படுகொலையையும் ,தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதையும் ஆழமாய் சித்தரிக்கிறது புத்தகம் !
இந்த நூலில், ஈழப் பிரச்னை மட்டுமல்லாமல், பொதுவான அரசியல், வாக்குச் சுதந்திரம், மொழிப்பற்று, இளைஞர்களின் பங்களிப்பு என சமூக மாற்றத்துக்கான தேவைகளை, சீமான் வலியுறுத்தி இருக்கும்விதம் அசாத்தியமானது. ஒவ்வொரு கட்டுரையையும் படித்துவிட்டு, ‘களத்துக்கு வரத் தயார்!’ என தமிழகம் முழுக்க எழும்பிய தன்னெழுச்சியே, சமூக மாற்றத்துக்கான சாட்சி!
சீமான் அவர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் ஐந்து மாதங்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் சிறையிலிருந்துகொண்டே எழுதிய தொடரினை விகடன் பிரசுரம் புத்தகமாய் வெளியிட்டு இருக்கிறது .
ஈழத்தில் தலைவர் பிரபாகரனும், அவரோடு சேர்ந்து போராடிய முகம் தெரியா மனிதர்களையும் தமிழக முன்னாள் முதல்வர் திரு. எம். ஜி.ராமச்சந்திரன் அவர்களின் பங்களிப்பும் இதுவரை தெரியாத
புதுப்புது தகவல்களும் இடம் பெற்றிருக்கின்றன '
வெறும் நூற்றி பதினோரு பக்க புத்தகம் நமக்குள் அதிகபடியான சுமையை கொடுத்துவிட்டு முடிந்து போய் விடுகிறது.
ஒவ்வொரு பக்கங்களும் ஈழ மக்களின் வலிகளை சுமந்து கிடக்கின்றது. இந்த ஈழ புத்தகம் எல்லோரிடத்திலும் ஆழமாய் தாக்கம் தரும் வங்கக்கடலைப் போல !!!
ஒரு இயக்குனராய் மட்டும் நான் கேள்விப்பட்டிருந்த சீமான் இந்தப் புத்தகத்தில் எழுதி இருக்கும் எழுத்துகளைப் பார்க்கும் பொழுது பிரமிப்பை ஏற்படுத்துகிறார். எதுகை மோனை அழகாய் சொல்லாடபட்டிருகிறது பக்கம் நான்கில் கடைசி பத்தியில் சில வரிகள் இதோ !
“ஓர் அறையைவிட்டு வெளியே வருவதைப்போலத்தான், சிறையைவிட்டு வெளியே வந்திருக்கிறேன்!”
ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் கேள்வியை கேட்டுவிட்டு பதிலையும் நம்மிடமே விட்டு விடுகிறார்!
27ஆம் பக்கத்தின் இரண்டாம் பத்தி !
“ராஜபக்ஷவுக்கு எதிராகப் போர்க் குற்ற விசாரணையை நார்வே நடத்தச் சொல்கிறது... கனடா கண்டிக்கிறது... லண்டன், ராஜபக்ஷவை வளைக்கிறது... சுவிட்சர்லாந்து, கண்டனமும் போராட்டமுமாகக் கொந்தளிக்கிறது. ஆனால், என் தாய்த் தமிழ் உறவுகள் வாழும் தமிழ்நாடு மட்டும் எந்தச் சலனமும் இல்லாமல் கிடக்கிறது!”
நியாயமான கேள்விதானே ?
ஈழமும் அதற்கு உதவிய முதல்வர் எம் ஜி .ஆர் பற்றியும் அத்தியாயம் ஐந்தில் புதியதாய் தகவல்களை காட்டியுள்ளார்.
பக்கம் 30 உள்ள எம்.ஜி.ஆரைப் புகழ்வது ஏன்?
“எம்.ஜி.ஆரை இழந்தது நம் இனத்தின் விடுதலையைத் தள்ளிப்போட்டுவிட்டது. நம் உணர்வுகளையும் உரிமைகளையும் மனமார ஆதரித்த அந்த மனிதரை இவ்வளவு சீக்கிரம் நாம் இழந்துவிட்டோமேடா தம்பி!'' - அண்ணன் பிரபாகரன் இப்படிச் சொன்னபோது குற்றறிவுகொண்டவனாக நான் குறுகிப்போய் நின்றேன். 'எம்.ஜி.ஆர். ஒரு மலையாளி!’ என தி.மு.க. தலைவர்கள் திரும்பத் திரும்பச் சொன்ன வாதங்களை நிஜம் என நம்பி, என் மூளை பழுதடைந்திருந்த நேரத்தில், அண்ணன் சொன்ன வார்த்தைகள் என் சொரணையில் சூடு போட்டன.
தலைவர் பிரபாகரனுடன் மூன்று மணி நேரம் பேசினால், அதில் முக்கால் மணி நேரம் எம்.ஜி.ஆரைப் பற்றியதாகத்தான் இருக்கும்.
இந்திய அமைதிப் படையை நம்பி நாம் ஆயுதங்களை ஒப்படைத்த நேரம்... நம் ஆயுதங்களை வாங்கிப் போட்டிக் குழுக்களுக்கு கொடுத்து, நமக்கு எதிரான போரைத் தூண்டிவிட்டது இந்திய அமைதிப் படை. மொத்தமாக 600 போராளிகள் மட்டுமே அப்போது இருந்தார்கள். 100 பேர்கொண்ட குழுக்களாகப் போராளிகளைப் பிரித்து அனுப்பிவிட்டு, நான் களத்தில் நிற்கிறேன். எந்தக் கணத்திலும் எதுவும் நடக்கலாம் என்கிற நிலை. 'பிரபாகரனை நெருங்கிவிட்டோம். இனி அவர் தப்பிப்பது கனவிலும் சாத்தியம் இல்லை!’ என இந்திய அமைதிப் படை கொக்கரிக்கிறது. எது குறித்து சிந்திப்பதற்கும் கணமற்ற வேளையில் தம்பி கிட்டு ஒரு பெட்டியில் பணத்தோடு வந்தார். மொத்தமாக 36 லட்ச ரூபாய். 'தம்பி கஷ்டப்படுவார்... இதை நான் கொடுத்ததாகச் சொல்லி அவரிடம் கொடு. எதுவும் நடக்காது. தம்பியை தைரியமாக இருக்கச் சொல்!’ எனச் சொல்லி, எம்.ஜி.ஆர். கொடுத்து அனுப்பிய பணம் என்றார் கிட்டு.
நிஜமாகவே என்னைத் தம்பியாக நினைத்தவரப்பா எம்.ஜி.ஆர்.!'' - அண்ணன் சொல்லச் சொல்ல என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. இந்திய அமைதிப் படை அண்ணனை அழித்தொழிக்க நினைத்த வேளையிலும், தேசியக் குற்றம் எனத் தெரிந்தும் அண்ணனுக்கு எம்.ஜி.ஆர். உதவத் துணிந்தது என் நெஞ்சத்துத் தசைகளை எல்லாம் துள்ளத் துடிக்கவைத்தன.
மேலும்....
ஈழம் அடைய எவ்வளவடா தம்பி தேவைப்படும்?’ என எம்.ஜி.ஆர். கேட்க, '100 கோடி ரூபாய் தேவைப்படும்!’ என அண்ணன் சொன்ன உடனேயே, நான் தர்றேன்... நான் தர்றேன்... நீ நல்லா சண்டை பிடி!’ என தைரியம் வார்த்த எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசாமல்... வேறு எவரைப்பற்றி ஐயா பேசுவது?
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதில் மறைக்க பட்ட உண்மைகளை அப்பட்டமாய் கூறுகிறார் !
பக்கம் 63 இல் சில வரிகள். இல்லை இல்லை ரணங்கள் !
கடற்பரப்பில் எல்லையை நிர்மாணிப்பது கடினம். தெரியாமல் எல்லை தாண்டும் மீனவர்களைக் கைது செய்வார்கள். எச்சரித்து அனுப்புவார்கள். கடற்பரப்பு கொண்ட அத்தனை நாடுகளும் அனுசரிக்கும் நியதி இதுதான். ஆனால், கோடானுகோடி பண உதவிகளையும் படை மரியாதைகளையும் ராணுவப் பயிற்சிகளையும் இந்திய அரசிடம் பெற்றுக்கொள்ளும் நட்பு நாடு என்கிற நாமகரணம் கொண்ட இலங்கை அரசு, தமிழக மீனவர்களைக் குருவியைப் போன்று சுட்டு வீழ்த்துகிறது! நடுக்கடலில் நம் தமிழ் மீனவர்கள் சிங்கள மீனவர்களால் எப்படி எல்லாம் சிதைக்கப்படுகிறார்கள் என்பது தெரியுமா? உறவுகளே... திருக்கை மீனோடு மனிதனை உறவுக்கு உட்படுத்தும் கொடூரங்களை இதுவரை உலகம் கேள்விப்​பட்டு இருக்கிறதா தமிழர்களே? அப்பனை விட்டு மகனை நிர்வாணமாக்குவது, சூடு போடுவது, பச்சை மீன்களை வாயில் திணிப்பது, ஒவ்வாத உறவுகளுக்கு உட்படுத்துவது... இப்படிச் சிங்கள வெறியர்களால் நடுக்கடலில் நம் உறவுகளுக்கு நிகழும் உபத்திரவங்கள் ஒன்றா, இரண்டா?
படிக்கும் நமக்கே உடம்பு கூசுகிறதே சித்ரவதை அடைந்த அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் விமர்சனம் என்பதால் என்னால் முழுவதையும் எழுத முடியவில்லை !
சீமான் நான் ஈழத்துக்குப் பயணமானபோது, சிங்கள ஓட்டுநர் ஒருவர் அங்கு உள்ளவற்றை விளக்கிச் சொன்னபடி வந்தார். 'இது எங்களின் கோயில்’ என ஓர் இடத்தைக் காட்டினார். 'அங்கே என்ன இருக்கிறது?’ எனக் கேட்​டேன். 'புத்தரின் பல் இருக்கிறது!’ எனச் சொன்னார். புத்தரின் பல்லைப் பத்திரப்படுத்தியவர்கள், அவருடைய சொல்லைப் பத்திரப்படுத்தவில்லையே!
ஆசையை வெறுக்கச் சொன்ன புத்தனின் வார்த்தை​களை அடியற்றி இருந்தால், எத்தனின் தேசமாக இலங்கை இன்று மாறி இருக்காது.
'வெற்றி... வெற்றி...’ எனக் கொக்கரித்த ராஜபக்ஷே, இன்று 'புற்று... புற்று...’ என அலறியபடி அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு ஓடு​கிறார். புற்று வருகிறதோ இல்லையோ... புலித் தலைவர் உத்தரவில் உம்மை வீழ்த்த சீக்கிரமே 'பொட்டு’ வரும்!
பக்கம் எண் 111 றில் இப்படி முடிகிறது கடைசி அத்தியாயம் !
காங்கிரசை வீழ்த்துவதற்கு எதையும் ஆதரிப்பேன் 'என நான் சொன்ன வார்த்தைகளை வைத்து 'அவர் போல் உறைந்து விடுவார்...இவர் போல் கரைந்து விடுவார் ...சுண்ணாம்பு சுவர் போல் ஆகிவிடுவார்’ என எவரும் கவலை பட வேண்டாம் '
உறைந்தும் கரைந்தும் போவதற்கு நான் ஒன்றும்
பனிக்கட்டி அல்ல ;புலிக்குட்டி !

அவர்கள் பக்கம் வீசும் வங்ககாற்று நம் பக்கம் வீசாமலா
போய்விடும் அதுவரை நாமும் காத்திருப்போம் !!!!!
ஈழத்தை காரணம் காட்டி ஆளாளுக்கு ஆதாயம் தேடுகையில்
முத்துகுமாரை எரித்த தீக்குச்சி போல! கூனிக் குறுகி என்னால்
ஆன விமர்சனத்தோடு முடித்து கொள்கிறேன் என் ஆதாயத்தை!

முற்றும் -பா .சண்முகம்

Comments

Popular posts from this blog

கோப்பையை பருகும் தேநீர்

கண்ணாடி நாட்கள் (சிறு கதை )

விட்டில் பூச்சி(சிறுகதை)